பருத்தியை தாக்கும் மாவு பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறை-வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் விளக்கம்

நீடாமங்கலம் : பருத்தியை தாக்கும் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.பருத்தி பயிரில் மாவுப் பூச்சியின் தாக்குதல் பற்றியும், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: மாவுப்பூச்சிகள் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவை.

இந்தப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இலைகளுக்கு அடியிலோ அல்லது பருத்தியின் நுனியிலோ இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும் தன்மை உடையது. இதுபோன்ற தாக்கப்பட்ட செடிகள் வாடி, கருப்பு நிறமாக மாறிவிடும். இந்த பூச்சிகளின் மேல் மெழுகு போன்ற அமைப்பு காணப்படும். மாவுப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கருப்பு பூசன வளர்ச்சி அதாவது இலையிலோ அல்லது தண்டுகளின் முனையிலோ கருப்பு நிறமாக இருப்பதை காணமுடியும்.

அப்படி தென்பட்டால் அவை சாறு உறிஞ்சும் பூச்சிகள், அதாவது மாவுப் பூச்சியின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது என்பதை உணர முடியும். இவற்றைக் கட்டுப்படுத்த தாவரப் பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் 5 சத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது எப்.ஓ.ஆர்.எஸ். 25 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு பயன்படுத்தலாம். செயற்கை பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் இமிடாக்குளோபிரிட் 100 மில்லி அல்லது தயமீத்தாக்சாம் 100 கிராம் ஒரு ஹெக்டேருக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று விளக்கமளித்துள்ளார்.

Related Stories: