பூட்டை உடைத்து, வெல்டிங் மிஷினை கொண்டு ஊத்தங்கரை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி

*ரோந்து போலீசாரை கண்டதும் கும்பல் ஓட்டம் ₹3 கோடி நகைகள், ₹5 லட்சம் ரொக்கம் தப்பியது

ஊத்தங்கரை : ஊத்தங்கரை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில், அதிகாலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பல், ரோந்து போலீசாரை கண்டதும் தப்பியோடி விட்டனர். இதனால், ₹3 கோடி மதிப்பிலான நகை மற்றும் ₹5 லட்சம் பணம் தப்பியது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டிகாரப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சாமல்பட்டி போலீஸ் எஸ்எஸ்ஐ ராமசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு கடன் சங்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனை பார்த்த போலீசார், கூட்டுறவு கடன் சங்கத்தின் அருகே சென்றனர். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் சிலர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதனை கண்டு உஷாரான போலீசார், அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அந்த கும்பல் தப்பியோடி விட்டதால், இதுகுறித்து சாமல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில், கூட்டுறவு கடன் சங்கத்துக்கு வந்த கொள்ளையர்கள், கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். முன்னதாக நுழைவு வாயிலில் இருந்த சிசிடிவி கேமராவில், தங்களது முகம் பதிவாகாமல் இருப்பதற்காக அதனை வேறுபக்கமாக திருப்பி வைத்துள்ளனர். மேலும் அங்கிருந்த அலாரத்தின் ஒயரையும் துண்டித்து விட்டு, கூட்டுறவு  சங்கத்திற்குள் சென்றனர். அங்கு எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அனைத்து விட்டு, அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் உடைத்தனர். மேலும், அங்கிருந்த கம்ப்யூட்டருக்கு செல்லும் ஒயர் மற்றும் சிசிடிவி கேமராக்களுக்கு செல்லும் ஒயர்களை துண்டித்துள்ளனர்.

இதையடுத்து அங்குள்ள லாக்கரை கையோடு கொண்டு வந்த கடப்பாரை மற்றும் வெல்டிங் மெஷினை கொண்டு, உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ரோந்து போலீசாரின் டார்ச்லைட் வெளிச்சத்தை கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது விசாரணையில் தெரியவந்தது.உரிய நேரத்தில் ரோந்து போலீசார் அங்கு சென்றதால், கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்த ₹3 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ₹5 லட்சம் ரொக்கம் தப்பியது. இதையடுத்து கொள்ளையர்கள் விட்டுச்சென்ற வெல்டிங் மெஷின், இரும்பு கம்பிகளை போலீசார் கைப்பற்றினர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொள்ளை சம்பவத்தில் 3 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து, சிசிடிவி பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: