கேரள அரசின் ஓராண்டு நிறைவையொட்டி இடுக்கி அணையை பார்வையிட அனுமதி: படகு சவாரிக்கும் ஏற்பாடு

மூணாறு: கேரள அரசின் ஓராண்டு நிறைவையொட்டி, இடுக்கி அணையை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட இன்று முதல் மே 31 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை குறவன் - குறத்தி எனும் இரு மலைகளை இணைத்து வளைவு வடிவில் கட்டப்பட்டதாகும். ஆசியாவில் இருக்கும் உயரமான வளைவு அணைகளுள் இது 2வது மிகப்பெரிய அணையாகும். கடந்த சில நாட்களாக பெய்த கோடைமழை காரணமாக, இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் கேரள அரசின் முதலாம் ஆண்டு விழாவையொட்டி, இன்று முதல் மே 31ம் தேதி வரை இடுக்கி அணையை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் நேற்று தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் மலையேற்றம் மற்றும் இடுக்கி அணை பகுதியில் படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அணையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை பெரியவர்களுக்கு ரூ.40 மற்றும் குழந்தைகளுக்கு ரூ.20, அணையில் படகு சவாரி செய்ய 8 பேருக்கு ரூ.600 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: