குடியுரிமை கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் 800 பாகிஸ்தானிய இந்துக்கள் இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கே திரும்பியதாக அதிர்ச்சி தகவல்!!

இஸ்லாமாபாத் : குடியுரிமை கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் 800 பாகிஸ்தானிய இந்துக்கள் கடந்த ஆண்டு நாட்டை விட்டு பாகிஸ்தானுக்கே திரும்பிவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அண்டை நாடான பாகிஸ்தானில் மத அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளானதால் அகதிகளாக நாடு திரும்பியவர்கள். ராஜஸ்தானில் தஞ்சம் புகுந்த பாகிஸ்தானிய இந்துக்கள், குடியுரிமை கோரிக்கை நிறைவேறுவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்பிவிட்டனர்.

அங்கு பாகிஸ்தானிய ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர்கள், இந்தியாவில் மிக மோசமாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பேசிய Seemant Lok Sangathan அமைப்பின் தலைவர் Hindu Singh Sodha, 2018ம் ஆண்டில் ஆன்லைன் மூலம் குடியுரிமை விண்ணப்பிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கி இருந்தாலும், பாகிஸ்தானிய பாஸ்போர்ட்களை காலாவதியானதாக கூறி ஏற்பது இல்லை என்று புகார் கூறியுள்ளார். இதனால் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு சென்று பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் இதற்காக அதிகம் செலவழிக்கும் நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2018ல் 7 மாநிலங்களைச் சேர்ந்த 16 மாவட்ட ஆட்சியர்கள் ஆன்லைன் மூலம் இந்து, கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சி, ஜெயின் மற்றும் பவுத்தம் என்று 6 மதத்தவர்களின் விண்ணப்பங்களை பெற்று அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் பணிக்காக நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மேலும் 5  மாநிலங்களில் 13 மாவட்ட ஆட்சியர்கள் இதற்காக பணிக்கப்பட்டதாக கூறியுள்ள Hindu Singh Sodha, கடந்த டிசம்பர் 22ம் தேதி மாநிலங்களவையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 10,635 பேரின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்ததை சுட்டிக் காட்டியுள்ளார். இது தவிர ராஜஸ்தானில் மட்டும் நேரடியாக விண்ணப்பித்த 25,000 பேர் குடியுரிமைக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.மத ரீதியாக துன்பத்திற்கு ஆளாகி நாடு திரும்பும் இந்துக்களுக்கு குடியுரிமை அளிக்க ஒன்றிய அரசின் குடியுரிமை திட்டம் வழிசெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: