திருவண்ணாமலையில் தேரோடும் மாட வீதி ₹15 கோடி மதிப்பில் கான்கிரீட் சாலையாக தரம் உயர்வு-அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தேரோடும் மாட வீதியை ₹15 கோடியில் கான்கிரீட் சாலையாக தரம் உயத்தும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தேரோடும் மாட வீதியை ₹15 கோடியில் கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என்.அண்ணாதுரை, எஸ்பி பவன்குமார், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேலு வரவேற்றார்.

சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநிலத்திலேயே அதிகமான பணிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது. ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 186 பணிகளை தேர்ந்தெடுத்து 257.17 கி.மீ தூரமுள்ள சாலையை ₹321 கோடியில் அகலப்படுத்துதல், உறுதிபடுத்துதல், சிறுபாலங்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை இரு வழி மற்றும் நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 32 இடங்களில் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடலூர்-சித்தூர் சாலையை ₹140 கோடியிலும், திருவண்ணாமலையில் இருந்து தானிப்பாடி, அரூர் வழியாக தருமபுரி இணைப்பு சாலை வரை ₹120 கோடியிலும் நிறைவேற்றப்படுகிறது.

ஊராட்சி சாலைகளை ₹162 மதிப்பில் அமைக்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பணிகளும் இந்தாண்டே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேரோடும் மாட வீதியை ₹15 கோடியில் தரம் உயர்த்தி கான்கிரீட் சாலையாக அமைக்கப்படுகிறது. ₹3.50 கோடியில் மின் பணிகள் நடைபெறும்.மாட வீதியை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணியை ஒருங்கிணைக்க பல்வேறு துறைகளை கொண்ட குழு அமைத்திருக்கிறோம். சாலையின் இருபுறமும் நடைபாதையும், கழிவுநீர் கால்வாய் வசதியும் அமையும். மாட வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றி ஒத்துழைக்க வேண்டும்.

மொழிவாரி மாநிலம் பிரியும் முன்பு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஒருங்கிணைந்திருந்தது. அதுதான் திராவிட நாடு. மொழி உணர்வு, பெண்களை சமமாக நடத்துதல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, புதிய தொழிற்சாைலகள் போன்றவற்றை செயல்படுத்துவது தான் திராவிட மாடல் ஆட்சி. எங்கள் ஆட்சியை போல வேறு எந்த ஆட்சியும் ஆன்மிகத்துக்கு செய்ததில்லை. வழிபாடு முறை, சடங்குகள் என்பது தனிமனித உரிமை.  திமுக ஆட்சியில் ஆன்மிகத்துக்கான எல்லா பணிகளையும் நிறைவேற்றுகிறோம். முதல்வர் ஆன்மிகத்துக்காக அத்தனையும் செய்து வருகிறார்.

இவ்வாறு, அவர் பேசினார்.இதில், கூடுதல் கலெக்டர் பிரதாப், தடகளச்சங்க மாநில துணை தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் எம்பி வேணுகோபால், முன்னாள் நகராட்சி தலைவர் தரன், டிஆர்ஓ பிரியதர்ஷினி, திமுக நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளர் டிவிஎம் நேரு, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் அருணை வெங்கட், நகராட்சி துணை தலைவர் ராஜாங்கம், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராம்காந்த்,  நகர இலக்கிய அணி அமைப்பாளர் திவாகர், பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணை தலைவர் ரமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி நன்றி கூறினார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அடங்கிய திமுக அரசின் சாதனை மலரை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்.

Related Stories: