தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு ஆன்லைன், ஆஃப்லைன் கலந்த கல்வி முறை: புதிய முயற்சிகளை உருவாக்க மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கை தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘ஆன்லைன், ஆஃப்லைன் கற்றல் என கலப்பின கல்வி முறையை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தினார். நாடு முழுவதும் கல்வியை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுத்துள்ளது. இதனை அமல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தேசிய வழிகாட்டுதல் குழுவின் ஆலோசனைப்படி, தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மோடியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பல்வேறு பரிந்துரைகளையும் வழங்கினார். புதிய கல்விக் கொள்கையை பாராட்டிய அவர், பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்காணித்து மீண்டும் அவர்களை கல்வி நீரோட்டத்தில் கொண்டு வருவதற்கான சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் அது நாட்டின் முன்னேற்றத்தை வழிநடத்தும் என்றும் அறிவுறுத்தினார். குறிப்பாக,  பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கற்றல் கலந்த கல்வி முறையை உருவாக்கவும் அவர் பரிந்துரைத்தார்.

அங்கன்வாடி மையங்களால் பராமரிக்கப்படும் குழந்தைகளின் தகவல்கள் பள்ளி பதிவேடுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் எனக்கூறிய மோடி, அவர்களின் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பள்ளிகளில் நடத்தும் பரிசோதனைகளை தொழில்நுட்ப உதவியுடன் பராமரிக்க வேண்டுமெனவும் கூறினார். பாடக்கருத்துக்களை குழந்தைகள் தெளிவாக புரிந்து கொள்ள, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை கொண்டு பாடக்கருத்துக்களை விளக்க வேண்டுமெனவும் கூறினார்.

Related Stories: