மலை இடுக்கில் சிக்கிய வாலிபர் இவரையா ராணுவம் கஷ்டப்பட்டு மீட்டது? கேரளாவில் போதை வீடியோ வைரல்

திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே மலை இடுக்கில் சிக்கி 2 நாட்களுக்கு பின்னர் ராணுவம் மீட்ட பாபு என்ற வாலிபர் போதையில் தரையில் உருண்டு ரகளை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள மலம்புழா செராடு பகுதியை சேர்ந்தவர் ரஷீதா. இவரது மகன் பாபு (23). செராடு பகுதியிலிருந்து 6 கிமீ தொலைவில் சுமார் 1,000 மீட்டர் உயரமுள்ள குரும்பாச்சி என்ற ஒரு செங்குத்தான மலை உள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி 7ம் தேதி 3 நண்பர்களுடன் பாபு இந்த மலைக்கு சாகசப் பயணம்  சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் வழுக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கீழே விழாமல் அங்குள்ள ஒரு இடுக்கில் அவர் சிக்கிக் கொண்டார்.

பெங்களூரு மற்றும் கோவையிலிருந்து ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் தீவிர முயற்சியினால் 44 மணி நேரத்திற்கு பின்னர் பாபு மீட்கப்பட்டார். ஒரு தனிப்பட்ட நபருக்காக ராணுவமே களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டது இந்தியாவில் அதுவே முதல் முறை. இந்த மீட்புப் பணிக்காக ரூ.70 லட்சத்திற்கு  மேல் செலவானதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாபு உலகம் முழுவதும் பிரபலமானார். பாபு மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஏராளமானோர் பண உதவி செய்தனர்.

பாலக்காடு எம்பி ரூ.கண்டன், பாபுவின் குடும்பத்தினருக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் உலகம் முழுவதும் பிரபலமான பாபு போதையில் தரையில் உருண்டு ரகளை செய்யும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் கஞ்சா போதையில் ரகளை செய்வதாகவும், இந்த போதை வாலிபரை மீட்பதற்காகவா ராணுவம் லட்சக்கணக்கில் செலவு செய்தது என்றும் கூறி ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: