டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பக்கா மீண்டும் கைதாகிறார்: மொகாலி நீதிமன்றம் பிடிவாரன்ட்

புதுடெல்லி: கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களில் டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பாஜ நிர்வாகி பக்கா, மொகாலி நீதிமன்றத்தின் பிடிவாரன்ட்டால் மீண்டும் கைதாகிறார். டெல்லி பாஜ செய்தித் தொடர்பாளரும், பாஜ இளைஞரணி தேசிய செயலாளருமான தஜிந்தர் பால் சிங் பக்கா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அவதூறாக பேசியதாக ஆம் ஆத்மி மாநில தலைவர் சன்னி சிங் மொகாலி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் டெல்லி சென்ற பஞ்சாப் போலீசார், பக்காவை கைது செய்து அழைத்து சென்றனர். இதற்கிடையே, பக்காவை சிலர் கடத்திச் சென்றதாக அவரது தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, பக்காவை ஆஜர்படுத்த அரியானா போலீசாருக்கு துவாரகா நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர்கள் பக்காவுடன் பஞ்சாப்புக்கு சென்று கொண்டிருந்த பஞ்சாப் போலீசாரை குருஷேத்ராவில் மடக்கி, பக்காவை மீட்டு டெல்லிக்கு அழைத்து வந்து, நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விசாரணை நடத்தி, பக்காவை விடுவித்தார்.

இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மொகாலியில் கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், பக்காவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மொகாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனால், பக்கா மீண்டும் கைது செய்யப்பட உள்ளார். இந்நிலையில், பக்கா கைது வழக்கில் ஒன்றிய அரசையும் சேர்க்க கோரியும், மே 6 அன்று ஜனக்புரி மற்றும் குருஷேத்ரா காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்கக் கோரியும் பஞ்சாப் அரசு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

* கெஜ்ரிவால் வீட்டை பாஜவினர் முற்றுகை

தஜிந்தர் சிங் பக்காவை பஞ்சாப் காவல்துறை கைது செய்ததைக் கண்டித்து, நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு பாஜவினர் போராட்டம் நடத்தினர். அப்போது கெஜ்ரிவாலுக்கு எதிராக முழக்கமிட்ட பாஜவினர், அவர் ஒரு சர்வாதிகாரி என்று குற்றம்சாட்டினர்.

Related Stories: