டெல்லியை சேர்ந்த ஒருவர் மூலம் முதல்வர் பதவிக்கு 2,500 கோடி பேரம்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவிக்காக என்னிடமும் ₹2,500 கோடி பேரம் பேசப்பட்டது என ஒன்றிய முன்னாள் அமைச்சர் பசனகவுடா பாட்டீல் யத்னால் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.கர்நாடக மாநிலத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா ஒப்பந்ததாரர் சந்தோஷ்பாட்டீலிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்டதால் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த குற்றச்சாட்டால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதையடுத்து மடங்களுக்கு நிதியை விடுவிக்க கமிஷன் கேட்கிறார்கள் என்று மடாதிபதியே குற்றம்சாட்டியது தீயாக பரவியது.  இந் நிலையில் விஜயபுரா தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பசனகவுடா பாட்டீல் யத்னால் கூறுகையில்,

‘ முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நான் இடம் பெற்றிருந்தேன். தற்போது  டெல்லியை சேர்ந்த ஒருவர் என்னிடம் தொடர்பு கொண்டு ₹2,500 கோடி தயாராக வைத்து கொள்ளுங்கள், உங்களுக்கு முதல்வர் பதவி ஏற்பாடு செய்கிறேன்’ என்றார். வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி 6 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள என்னிடமே இது போல் டெல்லியை சேர்ந்தவர் பேசுகிறார் என்றால் சாதாரண நபர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றார்.

உரிய விசாரணை தேவை

கர்நாடக  காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பதில் கூறுகையில், ‘பசன கவுடா பாட்டீல் யத்னால், மூத்த அரசியல்வாதி,. ஒன்றிய முன்னாள் அமைச்சர். எம்எல்சி., தற்போது எம்எல்ஏவாக பதவி வகிக்கும் அவரின் பேச்சை புறக்கணிக்க முடியாது. ₹2500 கோடி பணம் அளித்தால் முதல்வர் பதவி ஏற்பாடு செய்கிறோம் என அவரிடம் கூறியது யார்? இதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பதவிக்கு பணம், துணை பேராசிரியர் பதவிக்கு பணம் , அமைச்சர் பதவிக்கு பணம் தற்போது முதல்வர் பதவிக்கு ₹2500 கோடி என பாஜ ஆட்சியில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: