தமிழக பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 2021 மே 7ம் தேதி ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்றைய தினமே தலைமைச் செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ₹2,000 நிவாரணம், 14 மளிகைப் பொருள்கள் தொகுப்பு 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் ₹4,000 நிவாரண நிதி வழங்கப்பட்டது.
தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டபடி ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம் ஆகியவை பதவியேற்ற அடுத்த நொடியிலேயே அதிரடி சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். கொரோனா உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவிலேயே வேறு எந்த மாநில முதல்வரும் செய்யாதபடி, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பி.பி.இ கிட் அணிந்து நோயாளிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டினர். இதேபோல், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளின் செலவீனங்கள் பற்றி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அங்கீகாரம், தொழிற்கல்விப் படிப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க 7.5 சதவீத ஒதுக்கீடு என பல தனித்துவம் வாய்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்வராக பதவியேற்கும் முன்பே கொரோனாவைக் கையாள ‘கட்டளை மையம்’ ஒன்றை உருவாக்கி தனது ஆளுமையை வெளிப்படுத்தினார் மு.க.ஸ்டாலின். கடந்த 10 ஆண்டுகளாக அகல பாதாளத்திற்குள் சென்ற தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மக்களை பாதிக்காத வகையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். இதேபோல், அனைத்து தரப்பு மக்களின் குறைகளைப் போக்க ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ தனித்துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் மூலம் லட்சக்கணக்கான மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தலைமை செயலகத்திற்கு நேரடியாக வந்து மக்கள் காத்துக்கிடப்பதற்கு பதிலாக இணைய வாயிலாக புகார்கள் பெறப்பட்டு அது உரிய துறைக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் தீர்வு காணப்பட்டது. இதனால், கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு நபரும் நேரடியாக தலைமை செயலகத்திற்கு வந்து காத்துக்கிடந்து தனிப்பிரிவில் மனு அளிப்பது தவிர்க்கப்பட்டது. இதேபோல், காவல்துறையில் பெண் காவலர்களின் உடல்நிலை மற்றும் நலனை கருத்தில் கொண்டு நீண்ட நேரம் நிற்கும் பாதுகாப்புப் பணியில் இருந்து விடுவித்தது இந்த அரசு. மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ் இலக்கியத்திற்கு வலு சேர்க்கும் படைப்புக்களைத் தரும் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது மற்றும் கனவு இல்லம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கும் திட்டம் உள்ளிட்டவை இந்த ஓராண்டில் இந்த அரசின் யாரும் எட்டமுடியாத சாதனைகளாக உள்ளது. மேலும், நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் அறிக்கையின்படி, நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் சிறப்பு சட்டமன்றம் கூட்டி நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நீட் தேர்வை ரத்து செய்ய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியது. மின்துறை சம்பந்தப்பட்ட புகார்களை அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் ‘மின்னகம்’ என்னும் புதிய மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்க ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டது உள்ளிட்டவைகள் பொதுமக்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.கொரோனா காலத்தில் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை வரவழைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், பல முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி பல்வேறு புரிந்துணர்வு கையொப்பங்களும் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் முக்கிய நிறுவனங்களும் தங்களின் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவ உள்ளது. இதன்வாயிலாக தமிழகத்தில் படித்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், துபாய், அபுதாபி போன்ற அரபு நாடுகளுக்கு முதல்வரே நேரடியாக சென்று தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதேபோல், அனைத்து துறைகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழர்’ புதிய விருது வழங்கு வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக மக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருத்துவம் பார்க்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற புதிய திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டடு இதுவரை 67 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். தமிழர்கள் வழிபடும் தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டத்தையும் அரசு கொண்டுவந்தது. மருத்துவம் போன்றே பிற இளநிலைத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சமூகநீதிக் காவலர் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதியை சமூக நீதி நாளாக அறிவித்தது. அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அரசு அறிவித்தது. இதுமட்டும் இல்லாமல் சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவையும் அமைத்தது இந்த அரசு. இலங்கை அகதிகள் முகாம் என்பது ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மறுவாழ்வு முகாமில் வாழும் தமிழர்களுக்காக ரூ.225 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 150வது ஆண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்ததோடு, கோவையில் வ.உ.சிக்குச் சிலை, தூத்துக்குடியில் முதன்மைச் சாலைக்கு அவரது பெயர், அவர் எழுதிய புத்தகங்கள் மின்னாக்கம் உள்ளிட்ட 14 அறிவிப்புகளை இந்த அரசு வெளியிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனைகள் என்பது அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை பெற்ற சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் எத்தனை...எத்தனையோ சாதனைகளை படைத்து முதல்வராக பதவியேற்ற ஓராண்டிலேயே 80 சதவீதத்திற்கும் மேலான வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளாக திகழ்கிறது.