காடையாம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய காரில் போதை பொருள் பறிமுதல்-பெங்களூரு வாலிபர் கைது

காடையாம்பட்டி : காடையாம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய காரில் கடத்திவரப்பட்ட ₹2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பெங்களூரு வாலிபரை கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தீவட்டிப்பட்டி ஜோடுகுளி பஸ் நிறுத்தம் அருகே, நேற்று காலை கார் ஒன்று விபத்தில் சிக்கியதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐக்கள்  பழனிசாமி, செல்வம் மற்றும் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து நகர முடியாமல் நின்றிருந்தது. காரை மீட்ட போலீசார் சோதனை செய்தனர். அதில் 16 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 12 மூட்டைகளில் விமல் பாக்குகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இந்த போதை வஸ்துகள் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து காரை ஓட்டி வந்த பெங்களூரு சிட்டி மார்ட் பகுதியை சேர்ந்த ஹேமநாத் மகன் சங்கர்(26) என்பவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், போதை பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய சுமார் ₹15 லட்சம் மதிப்பிலான காரையும், ₹2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசர், காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

Related Stories: