மே மாதம் முழுவதும் பார்க்கலாம் நெல்லை அருங்காட்சியகத்தில் கற்கால கருவிகள் கண்காட்சி

நெல்லை :  நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாதம் தோறும் அபூர்வ பொருட்கள் குறித்த சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. நடப்பு மே மாதத்திற்கு கற்கால கருவிகள் சிறப்பு கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. நாடோடியாக திரிந்த மனிதன் முதல் முதலாக பயன்படுத்தி கற்கருவிகள் குறித்த வரலாறு இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்வதற்காக இதுகாட்சிப்படுத்தப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது. கற்கால மனிதர்கள் தாங்களே தயாரித்து உபயோகித்த கற்கருவிகள் உலகம் முழுவதும் கிடைத்துள்ளன.

கற்கால மனிதர்கள் கற்களை மட்டுமின்றி மரம், எலும்பு, கொம்பு போன்றவைகளையும் ஆயுதங்களாக பயன்படுத்தியுள்ளனர். இந்த கற்கால கருவிகளை தொல்பொருள் வல்லுனர் ராபர்ட் புரூஸ் பூட் என்பவர் கடந்த 1863ல் தமிழ்நாட்டில் முதன் முதலில் கண்டுபிடித்தார்.  இது தமிழக வரலாற்றின் முற்கால ஆய்வுக்கு உதவியது. பழைய கற்கால கருவிகள் சரளை படுகைகளில் ஏராளமாக கிடைத்துள்ளன.

அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பழைய கற்கால கருவிகள் கை கோடாரிகள், வெட்டும் கருவி, பிளக்கும் கோடாரி போன்றவை இடம்பெற்றுள்ளன. செங்கல்பட்டு அருகே அத்திரம்பாக்கம் பகுதியில் ஆற்றோரம்கிடைத்த கற்கால கருவிகள் பல கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவ மாணவிகள், பொதுமக்கள் பார்த்து சென்றனர். இக்கண்காட்சி இம்மாதம் முழுவதும் நடைபெறும் என காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரிவித்தார்.

Related Stories: