சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நீர் பந்தல் கொட்டகை எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் கொட்டகை மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உருவம் பொறிக்கப்பட்ட பேனர் ஆகியவை மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் தேமுதிக தலைமை அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் தேமுதிக அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த நீர் பந்தல் மற்றும் விஜயகாந்த் பிரேமலதா உருவம் பொறிக்கப்பட்டிருந்த பேனருக்கு தீ வைத்து, தப்பியோடியதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
