நூல் விலையேற்றத்தை கண்டித்து 15 நாட்களுக்கு கொள்முதல் நிறுத்தம்: திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

திருப்பூர்: நூல் விலையேற்றத்தை கண்டித்து 15 நாட்களுக்கு கொள்முதலை நிறுத்த போவதாக திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். திருப்பூர் கோவை மாவட்டங்களில் 5 லட்சம் தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு விசைத்தறி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள நிலையில், அனைத்து ரக பருத்தி நூல் விலைகளும் கிலோவுக்கு ரூ. 40 அதிகரிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்லலடத்தில் நடைபெற்ற திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தயாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் வரும் 15 நாட்களுக்கு நூல் கொள்முதல் செய்வதில்லை என தீர்மானம் நிறைவேற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொள்முதல் நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி வரை இழப்பீடு ஏற்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தல் ஜவுளி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நூல் விலையேற்றத்தை கண்டித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வருகிற 16-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து பல்வேறுகட்ட போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோன்று திருப்பூரில் நடைபெறும் போராட்டத்திற்கு ஸ்டீம் கேலண்டரிங் அசோசியேட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது. நூல் விலை உயர்வு தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பெரும் அளவு நடைபெறக்கூடிய விசைத்தறி மற்றும் கைத்தறி தொழில் உற்பத்தியில் அசாதாரணமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அதில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: