தலாக்-இ-ஹசன் உட்பட அனைத்து வகையான தலாக்கையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: தலாக்-இ-ஹசன் உட்பட அனைத்து தலாக்கையும் செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 3 முறை தலாக் கூறி, மனைவியை விவகாரத்து செய்யும் உடனடி முத்தலாக்கிற்கு (தலாக்-அல்-பித்தத்) உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், காஜியாபாத்தைச் சேர்ந்த பெனாசிர் ஹீனா என்பவர் தரப்பில் வக்கீல் அஸ்வினி குமார் துபே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஒருதலைப்பட்சமான, நீதிக்கு புறம்பான தலாக்-இ-ஹசனால் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார். தலாக்-இ-ஹசன் விவகாரத்து முறையில், மாதத்திற்கு ஒருமுறை தலாக் என, 3 மாதத்திற்கு கூறப்படும். இந்த காலகட்டத்தில் கணவன், மனைவி இடையே சமரசம் ஏற்படாவிட்டால், 3வது மாதத்திற்குப் பிறகு விவகாரத்து முறைப்படுத்தப்படும். கடைசி மாதத்தில் சமரசம் ஏற்பட்டால், முதல் 2 தலாக்குகள் சொல்லப்படாதவைகளாக கருதப்படும். இந்த தலாக் முறைப்படி மனுதாரர் மணவாழ்வு முறிந்துள்ளது. ஷரியத் சட்டப்படி தலாக்-இ-ஹசன் அனுமதிக்கப்பட்டது என காவல்துறையும் அதிகாரிகளும் மனுதாரரிடம் கூறி உள்ளனர்.

இதுபோன்ற தலாக்-இ-ஹசன் மற்றும் பிற அனைத்து வகையான தலாக் நடைமுறைகள் அரசியலமைப்புக்கு எதிரானவை. அவை தன்னிச்சயைானவை, பகுத்தறிவற்றவை. மேலும், ஏழை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறக் கூடியவை.

இது திருமணமான முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதோடு, அரசியலமைப்பு சட்டத்தின் 14, 15, 21 மற்றும் 25 மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச மரபுகளையும் மீறுகிறது. பல இஸ்லாமிய நாடுகளே இத்தகையை நடைமுறையை தடை செய்துள்ளன. எனவே, தலாக்-இ-ஹசன் மற்றும் பிற அனைத்து வகையான தலாக்குகளும் செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும், அனைத்து மக்களுக்கும் பொதுவான, நடுநிலையான சீரான விவகாரத்து நடைமுறைகளை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: