உக்ரைன்- ரஷ்யப் போருக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி நாளை பயணம்; 65 மணி நேரம், 25 கூட்டங்கள், 8 உலகத் தலைவர்களுடன் சந்திப்பு.!

புதுடெல்லி: உக்ரைன் - ரஷ்யப் போருக்கு மத்தியில் பிரதமர் மோடி நாளை ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் பயணமாக செல்கிறார். கிட்டத்தட்ட 65 மணி நேர நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் 25 கூட்டங்களில் பங்கேற்கிறார். அப்போது 8 உலகத் தலைவர்களையும் சந்திக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்துவரும் நிலையில், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2ம் தேதி (நாளை) பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நாடுகள் அனைத்தும், ரஷ்யாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள நிலையில், முதலில் ஜெர்மனிக்கு செல்லும் மோடி, அங்கிருந்து டென்மார்க்கிற்கு பயணம் மேற்கொள்கிறார். பின்னர், பயணத்தின் இறுதி நாளான மே 4ம் தேதி பாரிஸ் செல்கிறார். இந்தாண்டின் முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு  செல்லும் பிரதமர் மோடி, 25 கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

மூன்று  நாடுகளுக்கு செல்லும் அவர் கிட்டத்தட்ட 65 மணி நேரம் அங்கு செலவிட உள்ளார். இரு தரப்பு பேச்சுவார்த்தை,  பலதரப்பு பேச்சுவார்த்தை என பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளும் மோடி,  ஏழு நாடுகளை சேர்ந்த எட்டு தலைவர்களை சந்திக்கிறார். அதுமட்டுமின்றி, உலக  நாடுகளை சேர்ந்த 50 தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆயிரத்திற்கும்  மேற்பட்ட இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடவுள்ளார். முன்னதாக ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்திக்கும் பிரதமர் மோடி  இந்தியா-ஜெர்மனி இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார்.  இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள், இந்திய - ஜெர்மனி உறவுகளை  ஆழப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பின்னர்,  ஜெர்மனியில் உள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுகிறார்.

கடந்த டிசம்பர் மாதம்  ஜெர்மனியின் அதிபராக இருந்த ஏஞ்சலா மெர்கலின் பதவிக்காலம்  நிறைவடைந்ததையடுத்து, ஓலாஃப் ஷால்ஸ் புதிய அதிபராக பொறுப்பேற்றார். அவர்  அதிபராக பொறுப்பேற்ற பின், பிரதமர் மோடி ஜெர்மனிக்கு மேற்கொள்ளும் முதல்  பயணம் இதுவாகும். டென்மார்க் பிரதமர் மேட்டே பிரெடெரிக்சன்  அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும்  2வது இந்தியா- நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதன்  ஒருபகுதியாக, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாட்டு  பிரதமர்களுடன் கலந்துரையாடுகிறார். மேலும் டென்மார்க்கில் வசிக்கும்  இந்தியர்களுடனும் உரையாடுகிறார்.

அதனைத்தொடர்ந்து பிரான்ஸ் செல்லும்  பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிபர்  இமானுவேல் மேக்ரோனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.  இந்தியா - பிரான்ஸ் இடையேயான இருதரப்பு கலந்துரையாடலிலும் பங்கேற்கிறார். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது,  ரஷ்யா-உக்ரைன் விவகாரம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள்  இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு இதுவரை 62 முறை பல்வேறு உலக நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். இறுதியாக 2021ம் ஆண்டில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 2ம் தேதி வரை இத்தாலி, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், 63வது வெளிநாட்டு பயணத்தை பிரதமர் மோடி நாளை மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: