மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிகள் கோஷ்டி மோதல்

மதுரை: மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் பள்ளி மாணவிகள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பெரியார் பஸ்நிலையம் அருகே, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் படிக்கும் அவனியாபுரம், சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று மாலை வீட்டுக்கு செல்வதற்காக பெரியார் பஸ்நிலையத்தில் நின்றிருந்தனர். அப்போது மாணவிகள்  திடீரென கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். மாணவிகள் ஒருவரை ஒருவர் அடித்தும், முடியை பிடித்து இழுத்தும், கட்டிப்புரண்டும் சண்டை போட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த பெண்கள் அவர்களின் சண்டையை விலக்கி விட்டனர். பின்னர் மாணவிகள் ஊருக்கு பஸ் ஏறி சென்றனர். தகவல் அறிந்து வந்த மதுரை திடீர் நகர் போலீசார், ‘சண்டையில் ஈடுபட்ட மாணவிகள் எந்த பள்ளியைச் சேர்ந்தவர்கள், எதற்காக சண்டையிட்டனர் என விசாரித்தனர். இது குறித்து நாளை (திங்கள்கிழமை) பள்ளி ஆசிரியர்களிடம் புகார் தெரிவிக்க உள்ளனர். சம்மந்தப்பட்ட மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த மாதம் பேரையூர் பஸ்சில் மாணவர்கள் மோதி கொண்டனர். தற்போது மாணவிகள் மோதி கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: