ஆர்எஸ்எஸ் தலைவருக்கு நீதிமன்றம் ‘குட்டு’; ராகுலுக்கு ரூ.1,500 அபராத தொகை அனுப்பிவைப்பு.! மே 10ம் தேதி வழக்கு விசாரணை

மும்பை: அவதூறு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எதிர்மனுதாரர் ராகுலுக்கு ரூ.1,500 அபராத தொகையை மணி ஆர்டர் மூலம் அனுப்பி வைத்தார்.  கடந்த 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, ​​மும்பை பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ராகுல்காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த உள்ளூர் தலைவர் ராஜேஷ் குண்டே என்பவர் பிவாண்டி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்னும் நடந்து வருகிறது. இந்நிலையில் நடந்த வழக்கு விசாரணையின் போது, விசாரணையை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என புகார்தாரர் ராஜேஷ் குண்டே தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நிராகரித்த நீதிபதி ஜே.வி.பாலிவால், மனுதாரருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த அபராத தொகையை எதிர்மனுதாரரான ராகுல் காந்திக்கு வழக்கு செலவுக்காக வழங்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டார். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார். அப்போது ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதனால், மேற்கண்ட இரு அபராத தொகையையும் (ரூ.1,500) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ராஜேஷ் குண்டே மணி ஆர்டர் மூலம் அனுப்பி வைத்தார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 10ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories: