கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பாஜ நிர்வாகியிடம் தனிப்படை விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பாஜ நிர்வாகியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கோவை மற்றும் கோத்தகிரியில் மர வியாபாரம் செய்து வரும் அதிமுக நிர்வாகி சஜீவனிடம் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். நேற்று அவரது அண்ணன் சிபி (49)  என்பவரிடம் தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சிபி கூடலூரில் பாஜ நகர துணை தலைவராக இருக்கிறார். அதிமுகவினருக்கும் ஆதரவாக இவர் செயல்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. சில பகுதிகளில் இவர் அரசின் பல்வேறு துறைகளில் ஒப்பந்த பணி செய்து வருகிறார்.  

சிபியிடம் சயான், கனகராஜ் குறித்தும் கொடநாடு வழக்கில் தொடர்புடைய அதிமுக நிர்வாகிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இவர் கொடநாடு எஸ்டேட் பகுதியில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை நடத்தியிருப்பதாக தெரிகிறது. எஸ்டேட் பகுதிக்கு ஆட்களை வைத்து வேலை செய்துள்ளார். பங்களாவிற்கு யார், யார் வந்து சென்றார்கள்? என்ற விவரங்கள் சிபிக்கு தெரிந்திருக்கும் என போலீசார் கருதுகின்றனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

கொலை, கொள்ளை நடந்த நாளில் சிபி எங்கே இருந்தார்? என போலீசார் கேட்டனர். இவர்களின் இன்னொரு சகோதரர் சுனில் கோத்தகிரியில் வசிக்கிறார். கொலை நடந்த நாளில், கொடநாடு பகுதியில் இவர் காரில் சென்றதாக தகவல் வெளியானது. இதை போலீசார் உறுதி செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

* குன்னூர் டிஎஸ்பி திடீர் மாற்றம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சோலூர் மட்டம் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், குன்னூர் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி கொண்ட தனிப்படை விசாரித்து வந்தது. இந்நிலையில், டிஎஸ்பி சுரேஷ் தேனி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டிஎஸ்பி சுரேஷின் மனைவியும், கோவையில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரின் மனைவியும் கல்லூரி தோழிகள் என்பதால் இவ்வழக்கு விசாரணை தொடர்பான விஷயங்கள் கசிந்ததாக கூறப்படுகிறது. சுரேசுக்கு பதிலாக சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: