இந்தி தேசிய மொழியா? அஜய் தேவ்கன் மீது திவ்யா தாக்கு

பெங்களூரு: இந்தி தான் தேசிய மொழி என கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேஜிஎப் 2 படத்தின் வெற்றி குறித்து நான் ஈ பட நடிகர் சுதீப்பிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், நாம் பான் இந்தியா படங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டோம். இந்தி தேசிய மொழி என இனியும் சொல்ல முடியாது. அனைத்து மொழிகளுக்கும் ஒரே மரியாதைதான் என அவர் கூறினார். இதற்கு திடீரென பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் டிவிட்டரில் கோபம் கொப்பளிக்க பதில் அளித்தார். ‘அப்படியென்றால் உங்களது மொழி படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்கிறீர்கள்? இந்திதான் எப்போதும் தேசிய மொழி’ என்றார். இந்த டிவிட்டை அவர் இந்தியில் எழுதியிருந்தார்.

அஜய் தேவ்கனின் இந்த கருத்துக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி சுதீப் டிவிட்டரில் கூறும்போது, ‘நீங்கள் (அஜய் தேவ்கன்) இந்தியில் போட்ட டிவிட் எனக்கு புரிந்தது. நாங்கள் இந்தியை மதித்து, காதலித்து, கற்றுக்கொண்டதால் தான். ஆனால் நான் இந்த டிவிட்டை கன்னடத்தில் போட்டிருந்தால் உங்கள் நிலை என்னவாக இருந்திருக்கும். நாங்களும் இந்தியர் தான் சார்’ என்றார். இதுபற்றி வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த நடிகை திவ்யா கூறும்போது, ‘இந்தி தேசிய மொழி கிடையாது. அஜய் தேவ்கனின் அறியாமை தான் அவரை இப்படி டிவிட் போட வைத்திருக்கிறது. புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2 படங்களின் வெற்றி தான் இந்த பிரச்சனைக்கு காரணம். உங்கள் படங்களை நாங்கள் ரசித்துப் பார்ப்பது போல எங்கள் படங்களையும் நீங்கள் ரசித்து பாருங்கள்’ என பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories: