திருவாரூர் கமலாலய குளத்தில் மீண்டும் படகு சவாரி தொடங்கப்படுமா?: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

திருவாரூர்: திருவாரூரில் கமலாலயக் குளத்தில் சுற்றுலா பயணிகளுக்காக பழுதடைந்த 2 படகுகளையும் சரிசெய்து விரைவில் படகு சவாரியை துவக்கிட வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆழி தேரோட்டத்திற்கு பின்னர் கோயில் கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். தெப்பக்குளம் 5 வேலி பரப்பளவினை கொண்டது. இந்த குளத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி போக்குவரத்து முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின்போது துவங்கப்பட்டது. இதனையடுத்து ஆயில் இன்ஜின் பொருத்தப்பட்ட படகு ஒன்றும், காலால் சுற்றி செல்லும் பெடலிங் படகு ஒன்றும் என 2 படகுகள் மூலம் நகரில் உள்ள பொது மக்கள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் இந்த குளத்தை சுற்றி பார்த்து மகிழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் இந்த படகின் இன்ஜினில் ஏற்ப்பட்டுள்ள பழுது காரணமாக கடந்த 4 ஆண்டிற்கும் மேலாக இந்த படகு சவாரி நடைபெறவில்லை. இதேபோல் பெடலிங் படகும் பழுதாகி ஓரங்கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த குளத்தில் படகு சவாரி என்பது தடைபட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை துவங்கவுள்ள நிலையில் நகரில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை கவரும் வகையிலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உடனடியாக கமலாலய குளத்தில் படகு சவாரியை துவங்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, இன்ஜின் மற்றும் படகு பழுது காரணமாக படகு சவாரி தடைபட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலா துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் படகு சவாரி விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: