காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அனைத்து மலைவாசஸ்தலங்களிலும் அமல்படுத்த வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வன பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். மசினக்குடியில் தனியார் ஹோட்டல்கள், மதுபானங்களை பாட்டிலுடன் விற்பனை செய்வதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஜூன் 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: