சீன மக்கள் சுற்றுலா விசாவில் வர தடை: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: சீன நாட்டினர் சுற்றுலா விசாவில் இந்தியா வருவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) தெரிவித்துள்ளது. இந்திய மாணவர்களுக்கு சீனா விசா கொடுக்காததற்கு பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் பயின்று வந்த  மாணவர்கள் இந்தியா திரும்பினர். சீனாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் மீண்டும் திரும்பி சென்று படிக்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு சீனா விசா வழங்க மறுப்பதே அதற்கு காரணம். இது குறித்து ஒன்றிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி கூறுகையில், ‘‘ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்டது என்பதால் இந்த விவகாரம் தொடர்பாக இணக்கமான முடிவு எடுக்கும்படி சீனாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்தது.

கடந்த பிப்ரவரி 8ம் தேதி சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், வெளிநாட்டு மாணவர்கள் சீனாவுக்கு வருவதற்கான அனுமதி அளிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். இந்திய மாணவர்கள் மீண்டும் அங்கு திரும்புவதற்கான கோரிக்கை குறித்து சீன தரப்பு இதுவரை எந்த உறுதியும் அளிக்கவில்லை. கடந்த ஆண்டு தஜிகிஸ்தானில் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீயை ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியபோதும் இந்த பிரச்னையை அவர் எழுப்பினார்,’’ என்றார்.

இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு (ஐஏடிஏ) விடுத்துள்ள சுற்றறிக்கையில், ‘சீன மக்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசா இனி செல்லாது. அதேபோல்், 10 ஆண்டுகளுக்கான சுற்றுலா விசாவும் செல்லாது. பூடான், மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இந்தியாவை சேர்ந்த பயணிகள் மட்டும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்,’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: