‘2047ல் இந்தியா உலக தலைமை ஏற்கும்’ என்ற பெயரில் ஊட்டியில் 25, 26ல் துணை வேந்தர்கள் மாநாடு: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக வேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளார். மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அவர்தான் நியமனம் செய்து வருகிறார். வழக்கமாக அரசு பரிந்துரை செய்கிறவர்களில் இருந்து ஒருவரை கவர்னர் தேர்வு செய்வார். ஆனால்  பன்வாரிலால் புரோகித் கவர்னரான பிறகு இந்த வழக்கம் அதிமுக ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து கவர்னரே தன்னிச்சையாக துணை வேந்தர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அடிக்கடி கவர்னர் மாளிகை மற்றும் வீடியோ கான்பரன்சிங்கில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். மேலும் அனைத்து பட்டமளிப்பு விழாக்களிலும் அவர் கலந்து கொண்டு வருகிறார். இந்தநிலையில், 2047ல் இந்தியா உலக தலைமை ஏற்கும் என்ற பெயரில் ஊட்டியில் கருத்தரங்கு ஒன்றினை நடத்த கவர்னர் மாளிகை ஏற்பாடு செய்துள்ளது.

25, 26 ஆகிய இரு நாட்கள் நடக்கும் இந்த கருத்தரங்கில் மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். அனைவருக்கும் இதற்கான அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கத்தை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி துவக்கி வைத்து கலந்துகொள்கிறார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். தொடர்ந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகை வந்தடைந்தார். கவர்னர் வருகையையொட்டி நேற்று ஊட்டி-கோத்தகிரி சாலையில் போக்குவரத்து 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. மேலும், ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி-கோத்தகிரி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கல்விக்கு தொடர்பில்லாத வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Stories: