ஜோலார்பேட்டை அருகே ரயில்வே ஊழியர் வீட்டில் 30 சவரன் திருடிய பெண் உட்பட 5 பேர் கைது

* சென்னை, சேலத்தை சேர்ந்தவர்கள்

* முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே ரயில்வே ஊழியரின் வீட்டில் 30 சவரன் நகை திருடிய பெண் உட்பட 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர்   கே.பி.வட்டம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன்(55), சென்னையில் ரயில்வே கார்டாக உள்ளார்.  இவரது மனைவி பத்மா(48), மகன்கள் பிரகாஷ்(32), பிரதாப்(27), மகள் சரளாதேவி(30). இதில் மூத்த மகன் பிரகாஷிற்கு திருமணமாகி மனைவி மதியுடன் சென்னையில் வசித்து வருகிறார். அங்கேயே டிரைவராக பணிபுரிகிறார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள மகன் பிரகாஷ் வீட்டிற்கு,   கடந்த 2ம் தேதி வீரபத்திரன், மனைவி பத்மா ஆகிய இருவரும்  சென்றனர்.  அப்போது இளைய மகன் பிரதாப் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு ஸ்கூரு டிரைவர் பயன்படுத்தி பூட்டை திறந்த மர்மநபர்கள் பிரதாப் தூங்கிக்கொண்டிருந்த அறையின் அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து அலமாரியில் இருந்த சாவியை எடுத்து   பீரோவில் வைத்திருந்த சுமார் 30 சவரன் நகை மற்றும் வெள்ளி கொலுசு, ₹3 ஆயிரம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து வீரபத்திரன் மனைவி பத்மா கொடுத்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கூட்ரோடு பகுதியில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பெண் உட்பட 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் சேலம் மாவட்டம், வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகுமார்(35), சங்கர் (35), ராஜவேல்(38), சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(30), சங்கர் மனைவி சந்திரா(30) என்பதும், இவர்கள் ரயில்வே ஊழியரான வீரபத்திரன் என்பவரின் வீட்டில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்தனர்.

இதனையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம், பொருட்கள் போன்றவற்றை வேறு நபரிடம் கை மாற்றப்பட்டுள்ளதால் முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் மீது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: