நெமிலி தாலுகாவில் தொடர் மின்வெட்டு விசைத்தறி நெசவாளர்கள், விவசாயிகள் வேதனை-சீரான மின்சாரம் வழங்க கோரிக்கை

நெமிலி :  நெமிலி தாலுகாவில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தொடர் மின்வெட்டு காரணமாக விசைத்தறி நெசவாளர்கள்  விவசாயிகள் வேதனை அடைந்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட நெமிலி, பனப்பாக்கம், சிறுவளையம், சம்பத்ராயப்பேட்டை, திருமால்பூர், கீழ்வெண்பாக்கம், பெருவளையம், சயனபுரம், அசநெல்லிகுப்பம்  உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசைத்தறி நெசவுத் தொழிலும், விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதற்கு தேவையான நிலம் உழுதல், நெல் விதைத்தல், களையெடுப்பு போன்ற அத்தியாவசிய விவசாய பணிகளுக்கு மின்மோட்டார் இயங்குவதற்கு  மின்சாரம் தொடர்ந்து இல்லாததால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சித்திரை பட்ட நெல் சாகுபடி பணிகளை தொடர்ந்து செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தடையற்ற மும்முனை இணைப்பை தொழிற்சாலைகளுக்கு வழங்குவது போல் நாட்டு மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் விவசாய  தொழில் செய்யும் விவசாயிகளுக்கு மும்முனை இணைப்பு மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் விசைத்தறி நெசவாளர்கள் ஏற்கனவே நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் பாரம்பரியம் மிக்க நெசவுத் தொழிலை விட்டுவிட்டு சமையல் வேலை, செக்யூரிட்டி, ஏரி வேலை என்று தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டுள்ளனர். இப்போது தொடர் மின்வெட்டும் நிலவுவதால் இந்த தொழிலை மட்டுமே நம்பி உள்ள சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் தவித்து வருகின்றனர்.உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: