திருவிடந்தையில் கோலாகலம்: நித்யகல்யாண பெருமாள் கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் பிரசித்தி பெற்ற நித்யகல்யாண பெருமாள் கோயில் பிரமோற்சவம் கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நித்யகல்யாண பெருமாள் வீதியுலாவாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 5ம் நாள் கருடசேவை உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில், 7ம் நாளான நேற்று நித்யகல்யாண பெருமாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நித்யகல்யாண பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்தார். நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் குமரன் மற்றும் கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மாமல்லபுரம், டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் எஸ்ஐ விஜயகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: