கொட்டரை கிராமத்தில் விவசாயம் செழிக்க சித்திரை மாத பொன்னேர் நிகழ்ச்சி-வயல்களில் சிறப்பு பூஜையிட்டு உழுதனர்

பெரம்பலூர் : கொட்டரை கிராமத்தில் பொன்னேர் நிகழ்ச்சியில் ஏருக்கு பதில் டிராக்டர்களில் பொது நிலத்தில் வயலை உழுது வருண பகவானுக்கு வழிபாடு செய்தனர்.

தமிழ் வருடத்தின் தொடக்க மாதமான சித்திரையில் முதல் நாளன்றோ, வளர் பிறையிலோ மங்கலம் கருதி, உழவுக்குப் பயன்படும் ஏர் கலப்பைக்கு மஞ்சள் பூசி, வணங்கிட்டு விட்டு மாடுகளை தயார் செய்து ஊர் பொது வயலில் அல்லது பொது நிலத்தில் ஊரிலுள்ள விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஏர்பூட்டி உழுவதற்கு பெயர்தான் பொன்னேர் உழுதல். சங்ககாலம் தொட்டே இருந்து வரும் பொன்னேர் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டத்தில் குறிப்பாக ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொட்டரை, நாரணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் செழிக்க பூமித்தாயை வணங்கி உழவு தொழிலை தொடங்குவது பாரம்பரிய வழக்கம்.

இதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தில் பொன்னேர் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக கிராம பொதுமக்கள் விவசாயிகள் சார்பாக, கொஞ்சம் வித்தியாசமாக நாகரீக மாற்றத்திற்கு ஏற்ப, ஏருக்கு பதில் தற்போது பெரிதும் பயன்பாட்டிலுள்ள 20க்கும் மேற்பட்ட டிராக்டர்களை வைத்து உழுது கொண்டாடப்பட்டது. இதற்காக இந்த வருடம் விவசாயம் செழிக்கவும் பருவம் தவறாமல் மழை பொழியவும் விவசாயிகள் வறுமை நீங்கவும் வேண்டி, கொட்டரை கிராமத்தில் வருண பகவானை வணங்கி பொன்னேர் நிகழ்வு பெருமாள்கோயில் மானிய நிலத்தில் நடைபெற்று இந்த ஆண்டுக்கான உழவுத்தொழில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் கிராம காரியஸ்தர் மற்றும் கிராமப் பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் அனைவரும் தேங்காய், பழம், பூ, கம்பரிசி கொண்டுவந்து படையல் வைத்து வழிபாடு செய்தனர். உழவுத் தொழிலுக்கு வந்தனம் செய்வோம் என்ற முன்னோரின் முதுமொழியின்படி, கொட்டரை கிராமத்தில் பாரம்பரியம் மாறாமல் நடைபெற்ற பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி சுற்றுவட்டார மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

Related Stories: