பெரியகுளம் அருகே பராமரிப்பு இல்லாத மலைக்கிராம சாலை-போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி

பெரியகுளம் : பெரியகுளம் அருகே உள்ள மலைக்கிராம சாலை சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் போக்குவரத்து அவதிப்படுகின்றனர். விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாததால், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், போடி ஊராட்சி ஒன்றியத்தில் அகமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில்

சொக்கன் அலை, அண்ணா நகர், மூங்கில் காடு, கருங்கல் பாறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இதில், அகமலை கிராமத்திற்கு பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை போதிய பராமரிப்பு இல்லாமையாலும், மழை காலங்களில் ஆங்காங்கே குண்டும், குழியுமாகி சேதமடைந்தது.

 கடந்த 2018ல் ஏற்பட்ட கஜா புயலின்போது பெய்த மழையால், மேலும் சாலை சேதமடைந்தது. இதுவரை சாலையை சீரமைக்கவில்லை. இதனால், மலைக்கிராம மக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். அவசர காலங்களில் டூவீலர்களில் கூட செல்ல முடியவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். மலைப்பகுதியில் விளையும் வேளாண் பொருட்களையும் வாகனங்களில் சந்தைகளுக்கு கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். இதனால், அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை அவசர காலங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஆபத்தான வளைவுகளில் கூட சாலை மோசமாக இருப்பதாக, பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே, மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: