அரக்கோணத்தில் அதிரடி கேரளா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம் : ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியிலிருந்து சென்னை - அரக்கோணம் வழியாக கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் தன்பாத்  எக்ஸ்பிரஸ் ரயிலில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக, அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரக்கோணம் ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு  1.15 மணியளவில் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 4 பண்டல்களை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, தன்பாத்  எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எங்கிருந்து கடத்தி வந்தார்கள்? என்பது குறித்தும், மேலும் பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அரக்கோணம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயிலில் 14 கிலோ கஞ்சாவும், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 12 கிலோ கஞ்சாவும் மற்றும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் 4 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. சமீபத்தில் மட்டும் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் கேட்பாரற்ற நிலையில் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: