உலக அமைதி வேண்டி பெங்களூர் விவசாயி மகன் காஷ்மீர் வரை நடைபயணம்

நிலக்கோட்டை: உலக அமைதி, உலக வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பெங்களூரை சேர்ந்த விவசாயி மகன் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.கர்நாடக மாநிலம், பெங்களூரூவை சேர்ந்த விவசாயி அணில்குமார் மகன் ஆஷிஷ்குமார். இவர் உலக அமைதி, உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சுமார் 5,200 கிமீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் நேற்று மாலை திண்டுக்கல் மாவட்ட எல்லை பகுதியான பள்ளப்பட்டி வந்தார்.இதுகுறித்து ஆஷிஷ்குமார் கூறுகையில், ‘‘சமீபகாலமாக நாடுகள், மாநிலங்கள் இடையே பல்வேறு தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. பூமி தொடர்ந்து வெப்பமாகி வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் 60 சதவீத கடற்கரைகள் காணாமல் போகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் நமக்கு தெரியாமலேயே நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை அழிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நடை பயணத்தை துவங்கினேன். கடந்த ஏப்.7ம் தேதி குமரியில் துவங்கிய இந்நடை பயணத்தின் 14வது நாளாக இங்கு வந்துள்ளேன். தொடர்ந்து பெங்களூரூ, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மபி, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் வழியாக சுமார் 5,200 கிமீ நடந்து சென்று காஷ்மீரில் பயணத்தை முடிக்கவுள்ளேன். வழிநெடுகிலும் இயற்கை காட்சிகளை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதுடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கி வருகிறேன்’’ என்றார்.

Related Stories: