பெரியகுளத்தில் பொதுப்பணி துறை அலுவலக குடியிருப்புகள் புதுப்பொலிவு பெறுமா?: ஆட்டம் காணும் கட்டிடங்களால் அச்சம்

பெரியகுளம்: பெரியகுளத்தில் பொதுப்பணி துறை அலுவலக குடியிருப்பில் இடியும், இடிந்த நிலையில் உள்ள வீடுகளை அகற்றி விட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பெரியகுளம் பொதுப்பணி துறை அலுவலகத்தில் நிரந்தர பணியாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான குடியிருப்பு வீடுகள் என 40 மட்டுமே உள்ளன. இதிலும் 8 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து குடியிருக்க முடியாத நிலையில் உள்ளது. தற்போது பணியாளர்கள் குடியிருக்கும் வீடுகளும் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுப்பணி துறை அலுவலகத்தில் பணிக்கு வரும் வெளியூர் பணியாளர்களது குடும்பங்கள், வீடுகள் பற்றாக்குறையால் வெளியில் அதிக வாடகை கொடுத்து வீடுகள் பிடித்து தங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு பொதுப்பணித்துறை குடியிருப்பில் இடியும் நிலையில் உள்ள வீடுகளையும், ஏற்கனவே இடிந்த நிலையில் வீடுகளையும் அப்புறப்படுத்தி புதிய குடியிருப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பெரியகுளம் பொதுப்பணி துறை செயற்பொறியாளரிடம் கேட்ட போது ‘பணியாளர்கள் குடியிருப்பு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Stories: