திண்டுக்கல் அனுமந்த நகர் குளத்தில் கழிவுநீர் கலப்பால் நோய் அபாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம்  ஊராட்சிக்குட்பட்டது அனுமந்தநகர் குளம். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு  இக்குளம் இப்பகுதியின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்கும்  பயன்பட்டது. மழைக்காலங்களில் மரியநாதபுரம் சின்ன செட்டிகுளம், பெரிய  செட்டிகுளம் நிரம்பி வாய்க்கால் வழியாக அனுமந்தநகர் குளம் வந்தடைந்து, ராஜா  குளம் வரை தண்ணீர்செல்லும். கடந்த சில வருடங்களாக இக்குளத்தில்  சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து  விடுகிறது. இதனால் 2 நாட்களுக்கு முன்பு பெய்த லேசான மழைக்கே கழிவுநீர்  குளத்தில் நிரம்பி கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் பாசி படர்ந்து  குளம் முழுவதும் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனால் கொசுக்களின்  பெருக்கம் அதிகமாகி, இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படும்  அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த  குளத்தை தூர்வாரி மழைநீர் சேகரிப்பு மையமாக அமைக்க இப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: