இலங்கை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கேள்வி

கொழும்பு: இலங்கை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இவ்விவகாரம் ெதாடர்பாக நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், அன்னிய செலாவணி கையிருப்பு இல்லை. அதனால் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவற்றை வாங்க முடியவில்லை. மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.

உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலககோரி, அவரது அலுவலகம் எதிரே 10 நாட்களுக்கு மேலாக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் தெருமுனை போராட்டங்களும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். மேலும் பலர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தால், இலங்கையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. நேற்று நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் இப்பிரச்னை குறித்து எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: