பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்-அழகி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

வில்லியனூர் : புதுச்சேரி வில்லியனூர் அடுத்துள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் போல் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப்பின் கூத்தாண்டவர் கோயில் திருவிழா மீண்டும் இந்தாண்டு நடைபெற்றது.

திருத்தேர் உற்சவ விழா கடந்த மார்ச் 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, விநாயகர் பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு கடந்த 12ம் தேதி சாகை வார்த்தல், ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் சுவாமி திருக்கல்யாணம், பக்தர்கள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கூத்தாண்டவர் சாமிக்கு தாலி கட்டி பூஜை செய்தனர். அப்போது திருநங்கைகளும், புதிய உடைகள் மற்றும் புதிய அணிகலன்களை அணிந்து கொண்டும், தாலி கட்டிக்கொண்டும் திருவிழாவில் கலந்துகொண்டு, தங்களுக்காகவே நடக்கும் `மிஸ் பிள்ளையார்குப்பம்’ அழகிப் போட்டியில் கலந்துகொண்டனர்.

இதில் திருநங்கைகளுக்கு பேஷன் ஷோ, நடனம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு பெற்று மிஸ் பிள்ளையார்குப்பம் வென்ற புதுச்சேரியை சேர்ந்த கரிஷ்மாவுக்கு புதுச்சேரி ஐஜி சந்திரன் ஒரு பவுன் தங்கக்காசு வழங்கினார். 2ம் பரிசு வென்ற புதுச்சேரியை சேர்ந்த ஷியாமளாதேவிக்கு மேற்கு எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் 4 கிராம் தங்கக்காசு வழங்கினார். 3ம் பரிசு வென்ற புதுச்சேரியை சேர்ந்த மெகந்திக்கு எஸ்பி மோகன்குமார் 2 கிராம் தங்கக்காசு வழங்கினார்.

4ம் பரிசு வென்ற இந்துவுக்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் 2 கிராம் தங்கக்காசு வழங்கினார். 5ம் பரிசு வென்ற சென்னையை சேர்ந்த திரிஷாவுக்கு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் போட்டியில் பங்கேற்ற மற்ற திருநங்கைகளில் சிலர், தங்களுக்கு பரிசு வழங்கவில்லை என்று கூச்சலிட்டதால் மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 20ம் தேதி (இன்று) கூத்தாண்டவர் திருத்தேர் உற்சவமும், அழுகள நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர், மே 5ம் தேதி படுகளம் எழுப்புதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Related Stories: