நீலகிரி மாவட்டத்தில் 15 இடங்களில் மதுபாட்டில், பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு மையம்-கலெக்டர் தகவல்

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் 15 இடங்களில் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர். இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் குடியிருப்பை ஒட்டியும், வனங்களை ஒட்டியும் அமைந்துள்ளன. இந்த மதுபான கடைகளுக்கு அருகில் உள்ள சிறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள், அலுமினிய பாயில் பேப்பர் கப்கள் போன்றவைகள் தராளமாக விற்கப்படுகின்றன.

இவற்றை வாங்கும் குடிமகன்கள் அவற்றை அருகில் சாலையோரங்கள், நடைபாதைகள், நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் விவசாய தோட்டங்களில் வைத்து மது அருந்துகின்றனர்.

பின்னர் பிளாஸ்டிக் குப்பைகள் மதுபாட்டில்கள் போன்றவற்றை அப்படியே வீசி சென்று விடுகின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிப்பது மட்டுமின்றி நீர்நிலைகளும் மாசடைந்து வருகின்றன. வனங்களில் வீசி எறியப்பட்டு சேதமடைந்த மதுபாட்டில்களை மிதித்து காயமடையும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

இதனை தடுக்கும் வகையில் ஊட்டி அருகே தலைக்குந்தா பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 15 மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் காலி மதுபாட்டில்கள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக தலைக்குந்தாவில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்தும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஒவ்வொரு மையத்திலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்படும். இதுதவிர நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நீர்நிலைகள், சாலைகள், வனங்களில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களும் சேகரிக்கப்படும். இதுதவிர சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அங்கு வழங்கலாம். மொத்தமாக சேகரிக்கப்பட்டு அவற்றை வாங்குபவர்களிடம் வழங்கப்படும். அதன் மூலம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைக்கும்’’ என்றார்.

இதேபோல் காலி மதுபாட்டில்களை, டாஸ்மாக் கடைகளே திரும்ப பெற்று கொள்ளும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திரும்பப்பெறும் மதுபாட்டில்களுக்கு ஒரு சிறிய தொகையை வழங்கி வாங்கி கொள்ள வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு, மாவட்ட நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் காலி மதுபாட்டில்களை நீர்நிலைகள், வனப்பகுதிகளில் வீசி எறியப்படுவது தடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Related Stories: