வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் குடிநீர் பைப்லைன், கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளை மேயர் ஆய்வு-ஆக்கிரமிப்பு பூங்கா இடத்தை மீட்க நடவடிக்கை என தகவல்

வேலூர் : வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் கால்வாய், ஸ்மார்ட் சாலை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் சாலையில் இருபுறமும் கால்வாய் அமைத்து, இரும்பு கிரில் வைக்கப்பட்டது. அதேபோல் குடிநீர் பைப்லைன், பாதாள சாக்கடைக்கான பைப்லைன்கள் இணைப்புக்காக ஆங்காங்கே பைப்புகள் புதைக்கப்பட்டது.

தற்போது கலெக்டர் அலுவலகம் எதிரே குடிநீர் பைப்லைன் இணைக்க குடிநீர்வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருபுறங்களில் பள்ளம் தோண்டப்பட்டது. 2 வாரங்கள் ஆகியும் பைப்லைன் இணைக்காமல், பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ‘‘தினகரன்’’ நாளிதழியில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதேபோல் சத்துவாச்சாரி, வள்ளலார் பகுதிகளிலும் இருபுறங்களிலும் 400 மீட்டர் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிறிய கல்வெட் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகளுக்கு இடையூறாக செப்டிக் டேங்க் கழிவுகள் நேரடியாக கால்வாய்களில் திறந்து விடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் கால்வாய் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு தினகரன் நாளிதழியில் செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த இரு பகுதிகளிலும் மேயர் சுஜாதா நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடிநீர் பைப்லைன் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து மேயர் சுஜாதா கூறுகையில், ‘‘கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள குடிநீர் பைப்லைன் உடைப்பு மற்றும் வள்ளலார் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகைளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆக்கிரமிப்பில் உள்ள பூங்கா இடத்தை மீட்க பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ’ என்றார். இந்த ஆய்வின்போது கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் வசந்தி, மண்டல குழு தலைவர் நரேந்திரன், இளநிலை பொறியாளர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செப்டிக் டேங்க் அகற்ற உத்தரவு

வள்ளலார் பகுதியில் இருபுறங்களிலும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தனிநபர் கால்வாய் ஆக்கிரமித்து செப்டிங் டேங்க் கட்டி உள்ளார். அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவுநீர் தேங்கி நின்று அதிகளவிலான தூர்நாற்றம் வீசி வருகிறது என்று மேயரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த செப்டிங் டேங்க் இன்றுக்குள் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மேயர் உத்தரவிட்டார்.

Related Stories: