திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி முடிந்தது கிரிவலப்பாதையில் 158 டன் குப்பைகள் அகற்றிய பணியாளர்கள்: சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி முடிந்த நிலையில் கிரிவலப்பாதையில் 158 டன் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் உடனே அகற்றியுள்ளனர். திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலம் கடந்த 2 நாட்களாக நடந்து முடிந்தது. கொரோனாவால் 2 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு இந்தாண்டு அனுமதி அளிக்கப்பட்டது. தடை நீங்கிய உற்சாகத்தில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபட்டனர். இதனால், திருவண்ணாமலை நகரம் விழா கோலமாக காட்சியளித்தது. காணும் திசையெங்கும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது.

இந்நிலையில், கிரிவலம் நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக ஊர் திரும்பினர்.   இதையடுத்து, திருவண்ணாமலை நகரையும், கிரிவலப்பாதையையும் தூய்மை செய்யும் பணி அசுர வேகத்தில் நடந்தது. இந்த பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மட்டுமின்றி வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உட்பட 600 பேர் இரவு, பகலாக ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் கடும் உழைப்பால் 14 கி.மீ. தூரமுள்ள கிரிவலப்பாதை மற்றும் அண்ணாமலையார் கோயில் மாட வீதிகள் உள்ளிட்ட நகரின் சாலைகளும், தற்காலிக பஸ் நிலையங்களும் பளிச்சென தூய்மையடைந்தன. கடந்த 2 நாட்களில் மட்டும் திருவண்ணாமலையில் 158 டன் குப்பை சேகரிக்கப்பட்டதாக நகராட்சி தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

அதில், ஒருமுறை பயன்படுத்தி வீசிய குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 10 டன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளில் நடந்த பவுர்ணமி கிரிவலம், சித்ரா பவர்ணமி நாட்களில் அதிகபட்சம் 100 டன் குப்பை மட்டுமே அகற்றப்பட்டது. இம்முறை பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்ததால் குப்பை கழிவுகள் அதிகளவில் குவிந்தன. இந்நிலையில், திருவண்ணாமலை நகரின் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு பொதுப்பணித்துைற அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக, திருவண்ணாமலை நகராட்சி சார்பில் திருவண்ணாமலை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தூய்மை பணியாளர்கள் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாத பைகள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சி சார்பில் திருக்கோவிலூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பாராட்டு சான்று மற்றும் விருந்து வழங்கி கவுரவித்தனர். சித்ரா பவுர்ணமி நாட்களில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு ஈடுசெய்யும் மாற்று விடுப்பு வழங்கவும், ஊக்கத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: