அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசிய ரஷ்ய படை லிவிவ் நகரில் பயங்கர தாக்குதல்

கீவ்: மேற்கு உக்ரைனின் லிவிவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா 54வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கிவ், செர்னிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் நிலை குலைந்துள்ளன. இந்த போரில் பொதுமக்கள், இருதரப்பு ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மேற்கு உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, முக்கிய நகரமான லிவிவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

லிவிவ் நகரில் ரஷ்ய ராணுவம் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பிற நகரங்களை ஒப்பிடும்போது லிவிவ் நகரில் தாக்குதல் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது லிவிவ் நகர் மீதும் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

ரஷ்ய ஏவுகணை தாக்குதல் குறித்து லிவிவ் நகர மேயர் ஆண்ட்ரி சடோவி பேஸ்புக் பதிவில், ``ரஷ்யா படையினர் அதிகாலை 5 ஏவுகணைகளை லிவிவ் நகரை குறிவைத்து ஏவினர். இந்த ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து அடுத்தடுத்து நகரம் முழுவதும் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் படையினர் பதிலடி கொடுத்தனர்,’’ எனத் தெரிவித்தார். லிவிவ் ஆளுநர் மேக்சிம் கோஷிட்ஸ்கி, ``லிவிவ் நகரின் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலினால், நகரம் முழுவதும் புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது,’’ என்று தெரிவித்தார்.

சரணடைய மாட்டோம்: ரஷ்ய ராணுவத்தினர், ஏவுகணை  தாக்குதலுக்கு அஞ்சி குழந்தைகள் உள்பட மரியுபோல் நகர மக்கள் அசோவ்ஸ்டல்  இரும்பு தொழிற்சாலை, நகர காவல் தலைமையகமான மிகெய்ல் வெர்ஷினின் பகுதிகளில்  பதுங்கி உள்ளனர். உக்ரைன் வீரர்கள் சரணடையாவிட்டால் இவர்களை கொன்று விடுவதாக ரஷ்ய ராணுவம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதற்கிடையே, உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மைகால் கூறுகையில், ``இந்த போரில் வெற்றி பெற கடைசி வரை போரிடுவோம். உக்ரைன் ராணுவம் அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் போருக்கு தீர்வு காண தயாராக இருக்கிறது. ஆனால், ஒருபோதும் சரணடைய மாட்டோம்,’’ என்று தெரிவித்தார். அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ``முக்கிய நகரமான மரியுபோலில் புதிய உத்திகளை பயன்படுத்தி இறுதிவரை போரிடுவோம். இரும்பு தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளே தற்போதைய தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் அரணாக உள்ளது. கிழக்கு உக்ரைனை பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: