ஜஹாங்கிர்புரியில் போலீசார் மீது கல்வீசி தாக்குதல்: ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை

டெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரியில் வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற போலீசார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி அன்று நடைபெற்ற ஊர்வலத்தின் போது  இருதரப்பினர் கற்களை வீசி தாக்குதலை நடத்தியதுடன், வாகனங்களுக்கு தீ வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். வன்முறையில் காவலர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். வன்முறை சம்பவம் தொடர்பாக 22பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க ஜஹாங்கிர்புரி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரிக்க டெல்லி குற்றப்பிரிவு போலீசார் ஜஹாங்கிர்புரி பகுதிக்கு சென்றனர்.

சி-பிளாக் என்ற இடத்தின் அருகே போலீசார் சென்றபோது,அவர்கள் மீது திடீரென கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் அதிகரித்தது. கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வன்முறை சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களை பிளவுபடுத்தும் வகையில் யாரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட வேண்டாம் என்றும் டெல்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தனா வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: