மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வகுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டிகள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையதளத்தில் வெளியான காணொலி காட்சி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்தது. வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தபோது மலைப்பகுதிகளில் இருக்கக்கூடிய மதுபான கடைகளில் மதுபானம் வாங்குவோர், பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசி சென்று விடுகின்றனர்.

அந்த பாட்டில்கள் மீது வனவிலங்குகள் காலை வைக்கும் போது, அதன் பாதங்களில் காயம் ஏற்பட்டு, அடுத்த 3 மாதங்களில் காயமடைந்த விலங்கு இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், கண்ணாடி பாட்டிகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு ஏதேனும் உள்ளதா? என்ற கேள்வியை டாஸ்மாக் நிர்வாகத்திடம் நீதிபதிகள் எழுப்பியுள்ளனர். அதேபோல், கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் பொழுது, அந்த பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும், திட்டங்களையும் வகுக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அறிவுத்திய நீதிபதிகள், அத்திட்டத்தை வரம் 25-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதில் திருப்தி அடைந்தால், அந்த திட்டத்தை தொடர அனுமதிக்கப்படுவதாகவும், இல்லையெனில்  மலைவாசஸ்தலங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையானது ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.    

Related Stories: