வேலையில்லா திண்டாட்டம் ஒழிய உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி பேச்சு

அகமதாபாத்: ‘‘அடுத்த 25 ஆண்டுகளுக்கு உள்ளூர் பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள். அவ்வாறு செய்தால் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது’’ என பிரதமர் மோடி பேசினார்.குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பிராந்தியம் மோர்பியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் 108 அடி உயர அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அனுமன் ஜெயந்தியை ஒட்டி, நேற்று இந்த சிலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:சர்வதேச பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவால் இன்று ஒரே இடத்தில் தேங்கி நிற்க முடியாது. உலகம் முழுவதும் தற்சார்புக்கு எவ்வாறு மாறுவது என சிந்திக்கப்பட்டு வருகிறது. எனவே, உள்ளூர் தயாரிப்புகளை மட்டுமே மக்கள் வாங்க கற்றுக் கொள்ள வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மத தலைவர்கள், துறவிகள் வலியுறுத்த வேண்டும். ‘உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்’ என்பது அவசியம். நம் வீட்டில், நம் மக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதை நாம் கடைபிடித்தால், வேலையில்லா திண்டாட்டம் என்ற பேச்சே எழாது.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் விரும்பலாம். ஆனால், அவற்றில் நம் மக்களின் கடின உழைப்பு, நம் தாய் பூமியின் வாசனை இருக்காது. அனுமன் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியவர், அனைத்து வனங்களிலும் வாழும் இனங்கள், பழங்குடியினரை மதிக்கும் உரிமையை உறுதி செய்தவர். ராம காவியத்தில் அனுமன் தனது கடவுள் பக்தி மூலம் அனைவரையும் ஒன்றிணைத்தார். இதுவே தேசத்தின் நம்பிக்கையின், ஆன்மீகத்தின், கலாச்சாரத்தின், பாரம்பரியமத்தின் பலம். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களை ஒரே உணர்வுடன் இணைத்து, நாடு சுதந்திரம் அடைவதற்கான உறுதியையும் எடுக்க இந்த பலம் உதவியது. அனுமன் நமக்கு கற்பித்த தன்னலமற்ற சேவை மற்றும் பக்தி உணர்வு இந்தியாவை மேலும் வலிமையாக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை

அனுமன் சார்தாம் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 4 திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முதல் சிலை வடக்கே சிம்லாவில் கடந்த 2010ல் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2வது சிலை மேற்கில் மோர்பியில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. 3வது சிலை தெற்கில் ராமேஸ்வரத்தில் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: