திருமங்கலம் காட்டுமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா: ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்

திருமங்கலம்: திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் முனிசிப்கோர்ட் ரோட்டில் அமைந்துள்ளது காட்டுமாரியம்மன் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவை காரணம் காட்டி திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு தடை நீங்கப்பட்டதால் இந்த திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

கடந்த 7ம் தேதி துவங்கி பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. பால்குடம், பொங்கல் வைத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிசட்டி எடுத்தல் நேற்றிரவு நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள் சட்டியுடன் 21, 50, 500 என இரும்பினால் செய்யப்பட்ட அக்னிசட்டிகளில் தீப்பந்தம் ஏந்தி நகரில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

அலகு குத்தியும், பறவைகாவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 2 ஆண்டுகளுக்கு பின்பு பொங்கல் திருவிழா நடைபெற்றதால் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: