திருப்போரூர் பேரூராட்சி ஓஎம்ஆர் சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவு: அமைச்சர்களின் உத்தரவால் விரைவில் முடிந்தது

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய ஓஎம்ஆர் சாலையில், நடந்து வந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடைந்தன. திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக ஓஎம்ஆர் சாலை, நான்கு மாடவீதிகள், திருவஞ்சாவடி தெரு, வணிகர் தெரு, சான்றோர் வீதி, கண்ணகப்பட்டு, குமரன் நகர், எம்ஜிஆர் நகர், செங்கல்பட்டு சாலை, மாமல்லபுரம் சாலை, கச்சேரி சந்து தெரு ஆகியவற்றில் பகுதிகளில் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்பட்டன.

ஓஎம்ஆர் சாலையில் பல இடங்களில் பள்ளம் தோண்டும்போது பாறைகள் குறுக்கிட்டதால், பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தவேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறு, குறு நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை பார்வையிட்டு அக்டோபர் மாதத்துக்குள் முழுமையாக முடித்து திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், கடந்த மாதம் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகம், மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகிய துறைகளுக்கு இடையே ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முக்கிய சாலைகளில் பாதாள சாக்கடை குழாய்களை புதைத்து சாலைகளை நெடுஞ்சாலை துறைக்கும், பேரூராட்சி நிர்வாகத்துக்கு ஒப்படைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய காஞ்சிபுரம் மண்டல செயற்பொறியாளர் முனிபாபு செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத் துறை மண்டல பொறியாளருக்கு கடிதம் ஒன்றை கடந்த 6ம்தேதி அனுப்பினார்.

அதில் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் நடந்த பாதாள சாக்கடைப் பணிகளால் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்த நிலையில், அதில் ஓஎம்ஆர் சாலை, செங்கல்பட்டு சாலை ஆகியவற்றில் மட்டும் 100 சதவீத திட்டப்பணிகள் முடிவடைந்து விட்டது. இந்த சாலைகளை திரும்ப ஒப்படைப்பதாகவும், புதிய சாலைகளை அமைத்துக் கொள்ள ஆட்சேபணை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் தற்போது ஓஎம்ஆர் சாலை மற்றும் செங்கல்பட்டு சாலையில் உள்ள பள்ளங்கள் மூடப்பட்டு புதிய சாலை அமைக்கப்படும் என திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி செய்தியாளர்களிடம் தொிவித்தார். தமிழக அரசின் அமைச்சர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் எம்எல்ஏ தெரிவித்தார்.

Related Stories: