வைகை அணை ‘பிக்அப்’ டேமில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு-அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே, வைகை அணைக்கு முன்பு ‘பிக்அப்’ டேமில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணை அமைந்துள்ளது. இங்கிருந்து தினசரி மதுரைக்கு குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடுகின்றனர். அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீர், அணை முன்பாக உள்ள பிக்அப் டேம் பகுதியில் தேக்கி வைக்கப்படும். பின்னர் அங்குள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, மதுரை மாநகர் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டப் பகுதிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், பிக்அப் டேம் பகுதியில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் தண்ணீரில், அதிகமாக ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.

 இதனால், தண்ணீர் மாசுபடும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல தண்ணீரில் படர்ந்து வளர்ந்திருந்த ஆகாயத் தாமரை செடிகள் மக்கள் கோரிக்கைக்கு பின் அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஆகாயத் தாமரை செடிகள் வளரத் தொடங்கியுள்ளன. இதனால், தண்ணீர் தொடர்ந்து மாசுப்பட்டு வருகிறது. எனவே, தண்ணீரை மாசுபடுத்தும் ஆகாய தாமரைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: