அரசு ஊழியர் மனைவியை கொன்று நகை பறிப்பு பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை-அரியலூர் செசன்சு கோர்ட் தீர்ப்பு

அரியலூர் : ஜெயங்கொண்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலரின் மனைவியை கொன்று நகை பறித்த வழக்கில் பெண் உள்பட 2பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் செசன்சு கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 5வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் குணசேகரன்(50). கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாரதி (45). இவர்களுக்கு ஆதித்யன் என்ற மகனும், ஆர்த்தி என்ற மகளும் உள்ளனர். கடந்த 2018 மார்ச் மாதம் 29ம் தேதி அன்று குணசேகரன் வழக்கம்போல் திட்டக்குடி சென்றுவிட்டார். தினமும் பாரதி பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை அழைத்து வருவது வழக்கம். அன்று அழைக்க வராததால் குழந்தைகள் இருவரும் தாங்களாகவே வீட்டிற்கு நடந்து வந்தனர். வீட்டிற்கு வந்து கதவை தட்டியபோது கதவு திறக்கவில்லை.

பின்னர் சமையல்கூடம் ஜன்னல் வழியே பார்த்தபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு குழந்தைகள் அலறினர். இந்த சத்தத்தை கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்து கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாரதியின் கழுத்தில் கத்தி குத்தும், பின்புறம் தலையல் பலத்த காயமும் இருந்தது. பாரதியின் கழுத்தில் இருந்த 10பவுன் தாலி செயின் மற்றும் 5பவுன் செயின் மாயமானது தெரிய வந்தது.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து வேலாயுதநகர் செந்தில்குமார் மனைவி ஜெயந்தி (47), ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் சின்ராசு (22) ஆகியோரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு அரியலூர் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, குற்றம்சாட்டப்பட்ட ெஜயந்தி மற்றும் சின்ராசு ஆகியோர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 10வருட சிறை தண்டனையும், நகைகளை கொள்ளை அடித்ததற்காக 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், பாரதியை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories: