உலகிலேயே மிக உயரமான 146 அடி முருகன் சிலை கும்பாபிஷேக விழா: சேலம் ஏத்தாப்பூரில் பக்தர்கள் குவிந்தனர்

வாழப்பாடி: சேலம் அருகே, உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முருகன் சிலை கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மலேசியாவில் பத்துமலை முருகன்  கோயிலில் உள்ள 140 அடி உயர முருகன் சிலை தான், இதுவரை உலகிலேயே மிக  உயரமான முருகன் சிலை என பிரசித்தி பெற்று வந்தது. தற்போது, சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர், புத்தரகவுண்டன்பாளையத்தில், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், முத்துமலை அடிவாரத்தில் உலகிலேயே மிக உயரமான 146 அடி முருகன் சிலையை தனியார் நிறுவி உள்ளனர். 2016ல் தொடங்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக இந்த பிரமாண்ட முருகன் சிலையை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த முருகன் சிலைக்கு, நேற்று மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

இதற்காக கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்து வந்தது. தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜை நடந்தது. பின்னர், சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது, ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. மேலும், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் நாமக்கல், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: