சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில் காலணி தொழிற்சாலை; தொழில் துறையில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்று வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திண்டிவனம்:  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் கிராமத்தில் புதிதாக சிப்காட் தொழில் பூங்கா அமையவுள்ளது. அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி மதிப்பீட்டில் செய்யார் செஸ் டெவலப்மென்ட் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார்.  அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி முன்னிலை வகித்தார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொழில்துறை வளர்ச்சியடைந்து வருகிறது.

அனைத்து துறைகளும் சம விகிதத்தில் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பணியாற்றி வருகிறது. தற்போது அடிக்கல் நாட்டியுள்ள காலணி தயாரிப்பு நிறுவனத்தில் மகளிர் வேலைவாய்ப்பு பெற்று வருவதை பாராட்டுகிறேன். வேலைவாய்ப்பு  சமூகநீதியும், தொழில் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. தொழில் வளர்ச்சியால் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான நிறுவனங்கள் வர தொடங்கியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த காலணிகளை தயாரிக்க வேண்டும். காலணி உற்பத்தியில் இந்தியா மற்றும் உலக அளவில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. தமிழகத்தில் தோல் மற்றும் காலணி கொள்கைகள் விரைவில் வெளியிடப்படும். பொருளாதார முன்னேற்றத்தில் ரூ.68 ஆயிரத்து 375 கோடி முதலீடும், 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அன்னிய முதலீடு 45 விழுக்காடு அதிகரித்துள்ளது. அகில இந்திய அளவில் சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் மிகவும் சுதந்திர மாநிலமாக தமிழகம் இருக்கிறது  என்றார்.

Related Stories: