புளியம் பழம் விளைச்சல் அமோகம்-விலை உயர்வால் மகிழ்ச்சியில் விவசாயிகள்

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு புளியம் பழம் நன்றாக விளைந்துள்ளதால், வரத்து அதிகரித்துள்ளது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல்,மிளகாய், பருத்தி, சிறுதானியங்கள் விவசாயம் முதன்மை தொழிலாக இருந்தாலும் கூட, பனைமரம், புளிய மரம் சார்ந்த தொழில்களில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சாயல்குடி, நரிப்பையூர், மேலக்கிடாரம், மேலச்செல்வனூர் போன்ற செம்மண் பகுதிகள், திருப்புல்லாணி, ராமநாதபுரம், நயினார்கோயில், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, போகலூர், கமுதி,கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட கிராம பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள், குளங்கள், கண்மாய் போன்ற நீர்பிடி பகுதிகளில் ஆயிரக்கணக்கான புளியம் மரங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 வருடங்களை கடந்த மரங்கள் அதிகளவில் உள்ளது.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சிகளால் புளி காய்ப்பது குறைந்து, புளி வரத்தும் குறைந்து காணப்பட்டது. மரங்கள் பட்டுப்போனதால் மரச்சாமான், விறகு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக சில இடங்களில் பழைய மரங்கள் வெட்டப்பட்டது.இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக நல்ல மழை பெய்ததால் புளிய மரங்கள் நன்றாக துளிர் விட்டு வளர்ந்தது. இதனால் இந்தாண்டு புளியங்காய் நன்றாக காய்த்தது. தற்போது பழத்தன்மையை எட்டியுள்ளதால் விவசாயிகள் மரத்தில் ஏறி பழத்தை பறித்து முத்து(விதை) எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலச்செல்வனூர் விவசாயிகள் கூறும்போது, சில வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு நன்றாக புளி காய்த்துள்ளது. தற்போது பழமாகி விட்டதால், அவற்றை பறித்து, கூடு உடைத்து, புளி எடுத்தல், முத்தை நீக்குதல் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முத்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ புளி ரூ.80 முதல் 100 வரைக்கும், முத்தோடு உள்ள புளி ரூ.40 முதல் ரூ.50க்கும் விற்கப்படுகிறது. இதனால் புளி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட எடையிலான புளி, எடுக்கப்படும் முத்து கூலியாக கொடுக்கப்படுகிறது. சிலருக்கு ரூ.300 முதல் கூலி வழங்கப்படுகிறது என்றனர்.

வியாபாரி சேகர் கூறுகையில், இந்தாண்டு புளி வரத்து அதிகரித்துள்ளதால் புளியம் முத்து வரத்தும் அதிகரித்துள்ளது. கிலோ ஒன்றிற்கு விலை ரூ.12 வழங்கப்படுகிறது. இந்த முத்து கால்நடை தீவனங்கள் அறைப்பதற்காக விருதுநகர் வியாபாரிகள், பிராய்லர் கோழி தீவனத்திற்கு நாமக்கல், ஈரோடு பகுதி வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். கேரளா போன்ற அண்டை மாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்ற வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் உணவு பயன்பாட்டிற்கு புளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதிகமாக பசை தயாரிப்பிற்கு பயன்படுவதால் சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 வெளிநாடுகளுக்கு ஆண்டிற்கு 1000 மெட்ரிக் டன் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் சாதாரன புளியம் முத்து கூட அந்நிய செலவாணியை ஈட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது என்றார்.

Related Stories: