இம்ரான் கான் கட்சி சார்பில் பாகிஸ்தான் காபந்து பிரதமராக முன்னாள் நீதிபதி குல்சார் பரிந்துரை: அந்நிய சதிக்கு எதிராக போராட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் காபந்து பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவை இம்ரான் கானின் பிடிஐ கட்சி பரிந்துரைத்துள்ளது. பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக துணை சபாநாயகர் தீர்மானத்தை நிராகரித்தது. அதே சமயம், பிரதமர் இம்ரானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார். இதனால், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டம் 94வது பிரிவின்படி, காபந்து பிரதமர் பொறுப்பேற்கும் வரை தற்போதைய பிரதமராக இம்ரான் தொடர்ந்து நீடிப்பார் என்று அதிபர் ஆல்வி தெரிவித்தார். இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில், ``பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டத்தின் 224ஏ (4) பிரிவின்படி, காபந்து பிரதமர் நியமிக்கப்படும் வரை, தற்போதைய பிரதமராக இம்ரான் கான் பொறுப்பில் தொடருவார். காபந்து பிரதமரை தேர்வு செய்வதில் ஆளும், எதிர்தரப்பு எம்பிக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, காபந்து பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இம்ரானின் பிடிஐ கட்சி சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது இடைக்கால பிரதமர் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அதே சமயம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணை நடந்தது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு அவசியம் என்பதை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தனது அரசுக்கு எதிராக நடக்கும் அந்நிய சதிக்கு எதிராக நேற்றிரவு நாடாளுமன்றம் முன்பாக இம்ரான் கான் தலைமையில் பிரமாண்ட போராட்டம் நடத்தப்பட்டது.

Related Stories: